மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு குறைந்தக் கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக புதிய திட்டம் ஒன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், “தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை, தனது புதுப்புது திட்டங்கள் மூலம் இயற்கை அழகு கொழிக்கும் இடங்களையும், வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாப் பகுதிகளையும் பொதுமக்கள் கண்டு களிக்க தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக சிற்ப கலைகள் சிறந்து விளங்கும் மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகள் மிகக்குறைந்த கட்டணத்தில் வசதியாக தங்குவதற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின்படி இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ரூ.6,300 வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ஓய்வு வளாகத்தில் 2 இரவு, மற்றும் 3பகல் தங்குவதற்கு வசதியான அறை, மேலும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கும், இரண்டு நாள் காலை உணவு, இரவு உணவு, முட்டுக்காட்டில் உள்ள படகு குழாமில் இலவச படகு சவாரி செய்வது போன்றவை அடங்கும். இத் திட்டம் விடுமுறை நாட்கள் தவிர, வார நாள்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் செய்து தரப்படும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு, மேலாளர், கடற்கரை ஓய்வு வளாகம், மாமல்லபுரம் என்ற முகவரியிலோ அல்லது 044-27442361,62,63,9176995860, மண்டல மேலாளர் 8939896394 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் htn-mpm@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது