இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதன்பின்னர் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வெற்றிகரமாக நாடு திரும்பினர். 5 மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்த முழு விபரம் வருமாறு:
‘ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய 5 மீனவர்கள், போதைப் பொருள் கடத்தியதாக புனையப்பட்ட வழக்கு ஒன்றில், கொழும்பு உயர் நீதிமன்றம், மரண தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், ராஜ்ஜிய நடவடிக்கைகள் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், ஒட்டு மொத்த தமிழகமுமே இந்த கோரிக்கையை வைத்தன. மத்திய அரசு மேற்கொண்ட ராஜ்ஜிய நடவடிக்கைகள் காரணமாக இந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பினார்கள்.
5 மீனவர்களின் வழக்குச் செலவுக்காகவும், அவர்கள் சிறையில் இருந்த போது அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காகவும், மீனவர்கள் இந்தியா திரும்பியதும், புது வாழ்வு தொடங்குவதற்கு எனவும், மொத்தம் 63 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கிய ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் இந்தப் பேரவை பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுத்த, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தனது பாராட்டையும், நன்றியையும், இந்த மாமன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
கடல் எல்லையைக் கடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 38 மீனவர்கள் உடன் விடுவிக்கப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இதுவன்றி, இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு, அவர்கள் வசம் உள்ள 79 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்த மாமன்றம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.