ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியதை அடுத்து பிரபல வழக்கறிஞர் ஆச்சார்யா புதிய அரசு தரப்பு வழக்கறிஞராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2 மணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆச்சார்யா, உடனே சுறுசுறுப்பாக செயல்பட்டு 4 மணிக்கே தனது எழுத்துபூர்வமான வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். 18 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது என்றும் அதன்பிறகு வழக்கு விசாரணையை கர்நாடக அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதும், அவர்கள் அங்கம் வகிக்கும் 35 நிறுவனங்கள் பேரிலும் சட்ட விரோதமாகச் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சொத்துகள் குவித்துள்ளது உறுதியாகியுள்ளதாகவும் இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டம் 120 பி-இன் கீழ் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குத் தண்டனை வழங்கியதையும் சுட்டிக் காட்டிய ஆச்சார்யா அதை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்ய வேண்டும் என தனது எழுத்துப்பூர்வமான வாதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டதை அடுத்து ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.