இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு தீவிர முயற்சிகளுடன் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஹரியானா மாநிலத்தின் கால்நடைத் துறை, ‘நேஷனல் டெய்ரி’ என்ற திட்டத்தின் மூலமாக, மாடுகளுக்கும் ஆதார் எண் போன்ற பிரத்யேக அடையாள எண்களை வழங்கும் பணியை வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவிருக்கிறது!
ஹரியானா மாநிலத்தின் நாட்டு மாடுகளை இனம் காணவும், பாதுகாக்கவும் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி,UIDAI (The Unique Identification Authority of India) குடிமக்களுக்கு வழங்கும் பிரத்யேக அடையாள எண் போல, ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். மேலும் புகைப்படம், வயது, உடல் அமைப்பு, நிறம், இனம் போன்ற குறிப்புகள் அடங்கிய அடையாள அட்டை ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் தொங்கவிடப்படும்.
இதற்கான பயிற்சி, கால்நடைத் துறைப் பணியாளர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 3.5 லட்சம் மாடுகளுக்கு பிரத்யேக எண் வழங்கத் அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கால்நடைத் துறை முதன்மை செயலாளர் மஹாவீர் சிங் தெரிவித்துள்ளார். மாட்டின் உரிமையாளர்களுக்கு கூடவே ஒரு கையேடும் வழங்கப்படுகிறது.
அதில், மாடுகள் குறித்த அன்றாட விபரங்களைப் பதிய வேண்டும். இதன் மூலமாக மாடுகளுக்கு பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது. அதோடு ஒவ்வொரு ஊரிலும் உள்ள மாடுகளின் எண்ணிக்கை, மரபணு நோய்கள், மாடுகளின் உணவுத் தேவைகள் போன்றவற்றைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க இந்த எண்ணும், கையேடும் உதவும்.
இந்தத் திட்டம் மாடுகளுக்கு மட்டுமல்ல, மாடுகளை வைத்திருப்பவர்களுக்கும் பயன்தரக் கூடியது என்கிறார்கள்.