ஆதார் எண் கட்டாயம். மக்களவையில் மசோதா தாக்கல்
பொதுமக்களுக்கு அரசு வழங்கி வரும் மானியங்களை பெற ஆதார் எண் அவசியம் என்ற நிலையில் குழப்பம் இருந்து வந்தது. ஆனால் இனிமேல் அரசு மானியங்களை பெற ஆதார் எண் அவசியம் என்ற வகையில் புதிய மசோதா ஒன்று கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.
இந்த மசோதா பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மக்களவையின் ஒப்புதல் மட்டும் இருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை மாநிலங்களவையில் நிறைவேற்றாவிட்டாலும், மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டால் மட்டுமே போதுமானது. எனவே ஆதார் எண் கட்டாயம் என்பது உறுதியாகின்றது.
நேற்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பாராளுமன்றத்தில் ஆதார் எண் அவசியம் என்ற மசோதாவை மக்களவையில் விவாதத்திற்கு கொண்டு வந்தபோது அதில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
பிஜு ஜனதா தள உறுப்பினர் ததாகத் சத்பதி: ஆதார் திட்டத்துக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை தனது கண்காணிப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவொன்றும் பண மசோதா அல்ல. ஆனால் அந்த மசோதாவாக ஆதார் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலங்களவையின் மீளாய்வுக்கு உட்படுத்தாமல் மசோதாவை நிறைவேற்றவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஒரேமாதிரியான அணுகுமுறையைத்தான் கடைபிடிக்கின்றன.
பண மசோதாவாக, ஆதார் மசோதாவை கொண்டு வந்திருப்பதற்கு அதிகாரிகளே காரணமாவர். மத்திய அரசிடம் சில அதிகாரிகள், இந்தச் சட்டத்தை மிகவும் முக்கியமானது என்றும், எனவே அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்
காங்கிரஸ்: காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சதாவ்: மத்திய அரசின் நடவடிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இது நிலை மாறும் அரசு என்பது தெரிய வருகிறது. தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கும், ஆதார் திட்டத்தை விமர்சித்தனர். ஆதார் குறித்து சிபிஐ விசாரணை கோரப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜக அரசே இந்த மசோதாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது.
மார்க்சிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜிதேந்திர சௌதுரி: இந்த மசோதாவில் சாதகங்களும், பாதகங்களும் இருக்கின்றன, ஆகையால் இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். மேலும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டும்.
சிவசேனை உறுப்பினர் அரவிந்த் சாவந்த்: ஆதார் மசோதாவுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கின்றது. ஆனால் மசோதாவின் சில அம்சங்கள் கவலையளிக்கின்றன. ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும். நல்லது என்ற நம்பிக்கையால் அதிகாரிகள் செய்யும் சில செயல்கள், பிறகு பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்’
தெலுங்கு தேச கட்சி உறுப்பினர் ராம்மோகன் நாயுடு:ஆதார் திட்டத்தால் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை அடுத்து இந்த மசோதா குறித்து நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
பண மசோதாவாக ஆதார் மசோதாவை கொண்டு வந்தது சரியானதுதான். இந்திய அரசின் நிதித் தொகுப்பில் இருந்து விநியோகிக்கப்படும் நிதி தொடர்பான எந்த மசோதாவுக்கும், பண மசோதாவுக்கான தகுதியுள்ளது.
ஆதார் மூலம், பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். இதுவரையிலும் ரூ.15,000 கோடி வரை மிச்சப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக பல்வேறு உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர். அதை மத்திய அரசு தனது கவனத்தில் கொண்டுள்ளது.
தனிநபர் குறித்த தகவல்களை அரசு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது. அனுமதியின்றி அதுபோன்ற தகவல்களை பகிர்ந்து கொள்பவர்கள் தண்டிக்கப்படுவர். இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.