ஆதார் அட்டைகள் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும் கிடைக்கக்கூடிய பயன்களை மறுக்கக் கூடாது என்றும் ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தால் யாரும் பாதிப்படையக் கூடாது என்றும் ஆதார் அட்டை கேட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தங்களது முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கியாஸ் மானியம் பெறுவது, வங்கிகளில் ஆதார் எண் அட்டை எண்களை சமர்ப்பிப்பது போன்ர சில நடவடிக்கைகளில் ஒருசில அதிகாரிகள் மக்களிடத்தில் ஆதார் அட்டையை வலியுறுத்துவதாக தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், இது குறித்து செப்.23, 2013 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.” என்று நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு நேற்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்த மனுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், “நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, அதிகாரிகள் சிலர் குத்தகை ஒப்பந்தம், திருமண பதிவு போன்ற விஷயங்களுக்காக ஆதார் அட்டையை வலியுறுத்தி வருவதாகவும் இது ஒரு பெரிய கவலையளிக்கும் விஷயமாகும்” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “எங்கள் கவனத்துக்கும் இத்தகைய விவகாரங்கள் வந்துள்ளது. எங்களது முந்தைய உத்தரவுகளை கடைபிடிக்க கோருகிறோம்.” என்று கூறியதோடு அரசு சார்பு வழக்கறிஞர்கள் இதுகுறித்து பதில் கூற மேலும் வாய்ப்பு அளிக்க முடியாது என்றும் கூறினர். அதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல், “இது குறித்து அனைத்து தலைமைச் செயலர்களுக்கும் உடனடியாக மத்திய அரசு தகவல் அனுப்பும்” என்றார்.
ஆதார் அட்டை வலியுறுத்தலுக்கு எதிராக நிறைய மனுக்கள் உச்ச நீதிமன்ற்த்தில் குவிந்துள்ளன. இறுதி கட்ட விசாரணை தற்போது ஜூலை மாதம் 2ஆம் வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.