தமிழகத்தில் ஆடி மாதம், காவிரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் உழவு பணிகளை துவக்கும் மாதம். பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரை தெய்வமாக மதிக்கப்படுகிறது. தண்ணீரை அதிகம் விரையம் செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். இம்மாதத்தில் காவிரி, கங்கை போன்ற புண்ணிய நதிகளை தெய்வமாக பூஜை செய்து வணங்கப்படுகிறது. காவிரிக்கு நன்றி: ஆனி மாதத்தில் தென் மேற்கு பருவமழையின் காரணமாக, குடகு மலையில் பெருக்கு எடுக்கும் கவேரி வெள்ளம், கொங்கு மண்டலத்தை அடைவதால், விவசாயிகள் தங்கள் நெல் சாகுபடியை துவக்குகிறார்கள். நெல் விதைப்புக்காக காவிரியை வணங்கி வரவேற்பதே ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய குறிக்கோள். மேலும், ஆடிப்பெருக்கு நாளை குடும்ப பெண்கள் காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகின்றனர்.
ஆடி மாதத்தை அசுப மாதம் என்பார்கள், இம்மாதத்தில் திருமணம் நடக்காது. புதுமணத் தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கமும் உள்ளது. திருமணத்தின் போது மணமக்கள் சூடிய பூமாலைகள் பெண் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆடிப்பெருக்கு அன்று, காவிரியாற்றின் படித்துறைகளில் மங்களப் பொருட்கள் வைக்கப்பட்டு காவிரி தாயை வணங்கி, பாதுகாக்கப்பட்ட திருமண மாலைகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.பூஜை செய்யும் முறை: ஆடி மாதத்தில் புண்ணிய நதியாக திகழும் காவிரிக்கு பலவகையான உணவுகள் படைத்து, மஞ்சள் கருகுமணி மாலை, வளையல், தேங்காய் , பழங்கள், அரிசி, வெள்ளம், மஞ்சள் சரடுகள் போன்றவற்றை வைத்து தீபாரதனை செய்யப்படுகிறது. பூஜித்த பின் மஞ்சள் சரடை ஆண்கள் கைகளிலும், பெண்கள் கழுத்திலும் கட்டிக்கொள்கின்றனர். காவிரிக்கு பூஜை செய்து வணங்கினால், குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராது, காவிரி தாய் தமது குடும்பத்தை காப்பாள் என்று நம்பப்படுகின்றனர். மேலும் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும். கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையால் புதுமணத் தம்பதிகளுக்கு, வயது முதிர்ந்த சுமங்களிப் பெண்கள் மணப்பெண்ணுக்கு புதுத்தாளியை அணிவிக்கின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று நம்பி ஆடி மாதம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
தாலி பெருக்குதல் செய்வது ஏன்?
மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமி காசு, மணி, பவளம் ஆகியவற்றை கோர்த்து மணமகளின் கழுத்தில் சுமங்கலிப்பெண்கள் அணிவிப்பது தாலிபெருக்குதல். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது, மங்கல ஆபரணமான தாலியோடு லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதனை ஒற்றைப் படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் மூன்றாவது மாதத்தில் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காக இந்தச் சடங்கைச் செய்கின்றனர்.