ஆதரவும் தர மாட்டோம்! மற்றவர்களின் ஆதரவையும் பெற மாட்டோம்! – ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 31 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அங்கு ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராததால் இழுபறிநிலை நீடிக்கிறது.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் அந்தக் கட்சியானது போதிய பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று மறுத்து விட்டது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதியான ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர பாரதீய ஜனதா உறுதியளித்தால். அந்தக்கட்சிக்கு ஆதரவு தருவது பற்றி யோசிக்கலாம் என்றார். ஆனால், இது அவரது சொந்த கருத்து என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஆம்ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆதரவும் தர மாட்டோம். அவர்களின் ஆதரவையும் பெற மாட்டோம். யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்க மாட்டோம், யாரும் ஆட்சி அமைக்கவும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறிய அரவிந்த் கெஜரிவால் மறு தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply