ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அரவிந்த் கெஜ்வாலாவின் நெருங்கிய நண்பருமான மனிஷ் சிசோடியா, நேற்றைய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதுதேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 68வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மனிஷ் சிசோடியா டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால், அவர் ஏற்றிய தேசியக் கொடி தலைகீழாக பறந்ததை கவனிக்கவில்லை. அருகில் இருந்தவர்களும் அதனை கவனிக்க தவறினர்.
கொடிய ஏற்றிய பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய கீதத்தை பாடினர். அதன்பின்னர்தான் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பதை அனைவரும் கவனித்தனர். உடனே அங்கிருந்த தலைவர்கள் சுதாரித்துக்கொண்டு அவசர அவசரமாக தேசியக் கொடியை கீழே இறக்கி, பின்னர் மீண்டும் கொடியை சரியாக ஏற்றினர்.
இது குறித்து மனிஷ் சிசோடியா கூறுகையில், ”தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியம் காரணமாகவே இந்த தவறு ஏற்பட்டுவிட்டது” என்றார். இருப்பினும் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு, தேசிய கீதம் பாடி முடிக்கும் வரை தலைகீழாக ஏற்றப்பட்டதை கவனிக்காத தலைவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.