புதுடெல்லி முனிசிபல் ஊழியர் மீது தாக்குதல். ஆம் ஆத்மி எம்.எல்.எ அதிரடி கைது
டெல்லியில் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மத்திய அரசுக்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் மோதல் நடந்து வரும் நிலையில் புதுடெல்லி முனிசிபல் ஊழியர் ஒருவரை டெல்லி கன்டோண்மன்ட் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவரை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தன்மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சுரீந்தர்சிங் தாக்கியதாக புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் ஊழியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏவை விசாரணைக்காக டெல்லி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் மற்றும் அவரது கார் ஓட்டுநர் பங்கஜ், உதவியாளர் பிரவீன் ஆகியோர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ”அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து, அவரைத் தாக்கியதாக துப்புரவு ஆய்வாளர் ஆர்.ஜே.மீனா அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. சுரீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்து உள்ளார்.
எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி தொண்டர்கள் நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கைது நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் அஷூடோஷ் கூறும்போது, ”நாங்கள் எப்போதும் கூறுவதுபோல், ஏன் ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக கைது செய்கிறீர்கள்? ஏன் ஒரே சமயத்தில் அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்யக்கூடாது?” என்றார்.