சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் சரித்திர வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற 20 நாட்களிலேயே அவருக்கு அவருடைய கட்சியின் சீனியர் தலைவர்கள் மூலம் சோதனை வந்துவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் குரல் கொடுத்ததால் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று புதுடில்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு தேசிய செயற்குழுக் குழுவில் தொடர்ந்து நீடிப்பார்கள் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கட்சியின் மேலிடம் அறிவித்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பிய ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர் தொடர்ந்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நீடிப்பார் என்றும் கட்சி மேலிடம் நேற்று செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளது.