தலபெருமை:
மூலஸ்தானத்தில் ஐயப்பனின் வலது பக்கம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பொது தகவல்:
சாஸ்தா’ என்னும் சொல்லை கிராமத்து மக்கள் “சாத்தன்’, சாத்தான், சாஸ்தான்’ என்றெல்லாம் பயன்படுத்துவர். “சாத்து’ என்றால் “கூட்டம்’. காட்டிற்குள் இருக்கும் இவரை பக்தர்கள் கூட்டமாக வந்து வழிபடுவதால், இப்பெயர் பெற்றார். ஒரு சாரார் இவரை “அய்யனார்’ என்பர். “ஐயன்’ என்னும் சொல் “தலைவன்’ என்றும், “தலைசிறந்தவன்’ என்றும் பொருள். “ஆரியன்’ என்ற சொல்லுக்கு “உயர்ந்தவன்’ என்றே பொருள். “காவு’ என்றால் “சோலை’. “உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை’ என்று இதற்கு பொருள்.
தல வரலாறு:
சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார்.மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர்,திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னா லான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள்.சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார்.திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன், “”உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?” எனக் கேட்டதும், அவர் சம்மதித்தார். உடனேயே அவன் மறைந்து விட்டான்.அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டார். மதகஜ வாகன ரூபனாக அவரைக் கண்ட வியாபாரி, “”நீயே என் மகளை ஆட்கொள்ள வந்தாயா?” என அதிசயித்தார்.பின்னர், தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார்.ஐயப்பனைத் தரிசிக்க விரும்பும் பெண்கள் தம்பதி சமேதராக இங்கு சென்று வரலாம்.