ஆருஷி வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அவரது பெற்றோர்

டெல்லி அருகே நொய்டாவில் கடந்த மே மாதம் 2008 ஆம் ஆண்டு மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோரின் ஒரே மகளான ஆருஷி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் பல் மருத்துவர்களான ஆருஷியின் தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

ராஜேஷ் மற்றும் நுபுர் இருவரும் சதித்திட்டம் தீட்டி இந்த கொலைகளை செய்து அதன் சாட்சியங்களையும் அழித்துள்ளனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பரபரப்பான இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் கொலை வழக்கில் அவரது பெற்றோரே குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

குற்றவாளிகள் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டதையடுத்து, தாஸ்னா சிறையில் ராஜேஷ் தல்வாரும், நூபுர் தல்வாரும் அடைக்கப்பட்டனர். மாலை 4 மணியளவில் சிறைக்குள் சென்ற நேரம் முதல் இருவரும் அழுதபடியே இருப்பதாகவும், அவர்கள் அப்போதிலிருந்து உணவு ஏதும் சாப்பிடவில்லை என்றும் இதனால் அவர்கள் இருவருக்கும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply