சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது காளையார்கோவில் என்ற திருத்தலம். இங்குள்ள சொர்ணகாளீஸ்வரர் ஆலயம், சிவபெருமாளின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200வது தேவாரத் தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பொதுவாக ஒரு கோவிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பார்கள். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. அம்மன் சன்னிதி கிடையாது. ஆனால் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் சன்னிதிகள் தனித்தனியாக உள்ளன.
ஆலயத்தில் உள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருது பாண்டியர்களால் கட்டப்பட்டது. சோமேசர்-சவுந்திரநாயகி, சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி என மூன்று சுவாமிகளும், மூன்று அம்மன்களும், மூலவர்களாக தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த மூலவர்களில் சொர்ணகாளீஸ்வரர் மட்டுமே தேவாரப்பாடல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சண்டாசுரன் என்ற அசுரனை அழித்த காளி, சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கப்பெற்றார். அவரே இங்கு சொர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறாள்.
இங்குள்ள சோமேசர் சன்னிதிக்கு எதிரில் உள்ள பெரிய கோபுரம் மருது பாண்டியரால் கட்டப்பட்டது. பழங்காலத்தில் இந்தக் கோபுரத்தின் மீது ஏறிப்பார்த்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியுமாம். கோவிலில் நீராழி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம், ‘கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானை மடு’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது. இந்தக் கோவிலில் ஆயிரம் லிங்கங்கள் இணைந்த சகஸ்ர லிங்கம் உள்ளது. மேலும் தங்கத்தால் ஆன பள்ளியறை இவ்வாலயத்தில் இருப்பது விசேஷமானதாகும். இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும்.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற, சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் செய்கிறார்கள். இதனால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆலயத்தில் தைப்பூச தினத்தில் சொர்ணகாளீஸ்வரருக்கும், வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும், ஆடிப் பூரம் தினத்தில் சொர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. மார்கழி மாதம் வரும் பவுர்ணமி மற்றும் நவராத்திரியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை, பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்த இடத்தின் புராணப் பெயர் திருக்கானப்பேர் என்பதாகும். இந்த ஆலயத்தில் மந்தாரை மரம் தல விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தில் யானை மேடு என்னும் கஜபுஷ்கரணி, சிவகங்கைக் காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கவுரி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.