அப்துல்கலாமுக்கு சிலை வைக்க கூடாது. ஜமாத்துல் உலாமா அமைப்பு எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நினைவு தினம் வரும் 27ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் அப்துல்கலாமுக்கு நினைவு மண்டபம் எழுப்ப அடிக்கல் நாட்டும் விழா நடைபெறவுள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜூலை 27ஆம் தேதி அப்துல்கலாமின் திருவுறுவ சிலையும் பேய்க்கரும்பு என்ற இடத்தில் திறக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்துல்கலாமுக்கு சிலை வைக்க ஜமாத்துல் உலாமா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலை எழுப்புவது முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என்று ஜமாத்துல் உலாமா அமைப்பின் தலைவர் வலியுல்லா நூரி கூறியுள்ளார்.
மேலும் இந்த அமைப்பின் செயலர் எம்.அப்துல் ரஹ்மான் கூறியபோது, “இஸ்லாம் விக்கிரக ஆராதனைக்கும், தனிநபர் வழிபாட்டுக்கும் அனுமதியளிக்காது. கலாமுக்கு மரியாதை செய்வதென்பது அவரது உபதேசங்களின் படி நடப்பதாகும். வலுவான, வளர்ந்த இந்தியா என்ற அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதும், இளைஞர்கள் உச்சத்தை எட்ட கனவு காணவேண்டும் என்று கூறியுளார், இதனை நிறைவேற்றுவதும்தான் கலாமுக்கு நாம் செய்யும் மரியாதை” என்றார்.
கலாமின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக, இதன் மூலம் இளைஞர்கள் அவரிடமிருந்து ஊக்கம் பெற நினைவு மண்டபம், ஆடிட்டோரியம், அறிவுமையம் அல்லது மியூசியம் அமைப்பதே சிறந்தது. அதிகாரிகள் சிலை அமைப்பதை தவிர்ப்பது நல்லது’ என்று கூறியுள்ளார்.
தங்களது இந்தக் கருத்தை கலாம் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாகவும், ஆனாலும் ஜூலை 27-ம் தேதி கலாம் சிலைதிறப்பின் போது தாங்கள் எந்தவித இடையூறுமோ, ஆர்பாட்டமோ நடத்த மாட்டோம் என்றும் உலாமா உறுதியளித்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.