உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அபு ஆஸ்மி என்பவர் இன்று காலை தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியபோது, “சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான முஸ்லீம்களாக இருக்க முடியாது. சமாஜ்வாடி கட்சியை எதிர்த்த அல்லது எதிராக வாக்களித்த முஸ்லீம்களை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். மரபில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவ்வாறு அபு ஆஸ்மி ஆவேசமாக பேசியுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதை சில தலைவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பாஜகவின் தலைவர் ஒருவர் பேசியதும், மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் பேசியதும் ஏற்கனவே பரபரப்பை உண்டு ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
அபு ஆஸ்மியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லீம் மதத்தினர்களின் பிறப்பை சந்தேகப்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும், இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்களை சமாஜ்வாடி தலைவர்கள் நிறுத்தவேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.