சர்வதேச கச்சா எண்ணெய் சரிவுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க முடியாது. மத்திய அமைச்சர்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காமல் ஒரு சிறு அளவு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் குறைத்து அறிவித்தன. ஆனால் சர்வதேச சந்தையின் நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை சரியாக குறைத்தால் பெட்ரோல் விலையை ரூ.5ம், டீசல் விலையை ரூ.3ம் குறைத்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஆனாலும், இந்த விகிதத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது. ஏனெனில், கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, மாநில வரிகள் மற்றும் வினியோகஸ்தர் கட்டணம் ஆகியவை மாறாமல் அப்படியேதான் உள்ளது. எனவே, சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது” என்று கூறியுள்ளார்.