கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி

மதுரவாயல் போலீசார் ஆலப்பாக்கம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கி உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.

மேலும், அவர்கள் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.

அப்போது, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர், 17 வது தெருவில் உள்ள ராஜ்குமார் என்பவரை அவரது மனைவி உதவியுடன் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசார் அவர்கள் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாத்தப்பட்டிருந்த கதவை தட்டினார்கள். அப்போது உள்ளே இருந்து அழுதபடி பெண் ஒருவர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர், எனது கணவரை கொலை செய்து விட்டார்கள் என்று கதறி அழுதபடி ஓடி வந்தார்.

இதைக்கண்டதும் போலீசார் கொலையாளிகளை பிடித்து விட்டோம். இதற்கு நீங்களும் உடந்தையாக இருந்ததாக கூறி விட்டார்கள் என்று கூறினார்கள். இதனைகேட்டு அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் போலீசார் இறந்து கிடந்த ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ராஜ்குமார் (வயது 30) மற்றும் வித்யா(27), இருவரும் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 6 வயதில் தீபிகா என்ற மகள் இருக்கிறாள். ராஜ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே காஞ்சீபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவருடன் வித்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டன் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கடந்த 2 வருடங்களாக இருவரும் பல முறை உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த தகவல் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனுடன் இருக்கும் தொடர்பை விட்டுவிடுமாறு மனைவியிடம் பலமுறை கண்டித்தார். ஆனால் வித்யா கேட்காமல் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று வித்யா, மணிகண்டனிடம் கூறினார். இதையடுத்து, மணிகண்டன், செய்யாறில் உள்ள கூலிப்படை தலைவன் துரை என்பவரிடம், ராஜ்குமாரை கொலை செய்ய ரூ.3 லட்சம் கொடுத்தார். பின்னர் துரை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது கூட்டாளிகளான 4 பேரிடம் ராஜ்குமாரை கொலை செய்வது குறித்து தகவல் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்த கொலையாளிகள் 4 பேரை வீட்டின் கதவை திறந்து வித்யா உள்ளே அழைத்துச்சென்றார்.

பின்னர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராஜ்குமாரின் கை, கால்களை வித்யா மற்றும் கூலிப்படையினர் பிடித்துக்கொண்டு கழுத்தை அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜ்குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர், இந்த கொலையை எப்படி திசை திருப்புவது? என்று எண்ணினார்கள். ராஜ்குமாரின் கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு நகைக்காக கொலை நடந்தது போல் போலீசாரை நம்ப வைத்து கவனத்தை திசை திருப்ப முடிவு செய்து விட்டு கூலிப்படையினர் அங்கிருந்து சென்றனர்.

ஆனால் வழியில் வாகன சோதனையின்போது கூலிப்படையைச் சேர்ந்த கிரிதரன், செந்தில், சரவணன், பெருமாள் ஆகியோர் பிடிபட்டனர். மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலைக்கு மூலகாரணமாக இருந்த வித்யா, கள்ளக்காதலன் மணிகண்டன், கூலிப்படை தலைவன் துரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான வித்யா அளித்துள்ள வாக்குமூலம்:
கடந்த 2 வருடங்களாக எனக்கும், மணிகண்டனுக்கும் தொடர்பு இருந்து வந்தது. இதனை தெரிந்து கொண்ட கணவர் ராஜ்குமார் தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்வதுடன் மணிகண்டனுடனான தொடர்பை விட்டு விடுமாறு தொந்தரவு செய்து வந்தார். இதனால் எனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மணிகண்டனிடம் கூறியதையடுத்து கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய முடிவு செய்தோம்.

நேற்று முன்தினம் அதிகாலை கூலிப்படையினர் வந்தபோது கதவை திறந்து விட்டேன். தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் கை, கால்களை நானும் சேர்ந்து பிடித்துக்கொண்டேன். அப்போது ஒருவன் மட்டும் ராஜ்குமாரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தான். இதில் கண் எதிரே கணவர் துடி, துடித்து இறந்து போனார். பின் இந்த கொலையை மறைக்க சாமர்த்தியமாக முடிவு செய்தோம்.

ஆனால் கொலை செய்த சிறிது நேரத்திலேயே கொலையாளிகள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply