சரத்குமார்-நாசர், ராதாரவி-விஷால் நேருக்கு நேர் போட்டி
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
முதல்கட்டமாக விஷால் அணியில் இருந்து நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவார் என்றும் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சரத்குமார் அணியினரும் தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு தற்போது செயலாளர் பதவியில் இருக்கும் ராதாரவியும் மீண்டும் போட்டியிடவுள்ளனர்.
மேலும் சரத்குமார் அணியில் இருந்து சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட உள்ளனர். இவர்கள் எந்த பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று பின்னர் அறிவிக்கப்பட இருக்கின்றது. மேலும் தனுஷும் ஏதாவது ஒரு பதவிக்கு சரத்குமார் அணியில் இருந்து போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விஷால் அணியில் இருந்து விக்ராந்த், கார்த்தி, ஆர்யா, விஷ்ணு, ஜெயம் ரவி ஆகியோர் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் சில நாட்களில் இரு அணியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் முழுவிபரம் தெரியவரும் என கூறப்படுகிறது.