தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்பநாபன் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும் அதேநேரம் இந்த தேர்தல் எந்த முறைகேடுகள் நடைபெறாமல், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற, ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபனை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்பநாபன், சரத்குமார் மற்றும் விஷால் தரப்பு அணியினருடன் தேர்தல் தேதியை முடிவு செய்வது குறித்து கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் பத்பநாபன் இன்று அறிவித்துள்ளார். மேலும் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட்எபாஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நடிகர் சங்க தேர்தலில் 3,139 பேருக்கு வாக்கு அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விஷால் மற்றும் சரத்குமார் அணியினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விரைவில் இரு அணியினர்களும் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரத்குமார் அணியில் இருந்து நடிகர் சங்க தலைவராக சரத்குமார், செயலாளராக ராதாரவியும் போட்டியிடுவார்கள் என்றும், விஷால் அணியில் இருந்து நடிகர் சங்க தலைவராக நாசர், மற்றும் செயலாளராக விஷால் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.