தமிழகத்தை போலவே கேரள சட்டமன்ற தேர்தலிலும் நடிகர்களின் ஆதிக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் சரத்குமார், கருணாஸ், வாகை சந்திரசேகர், சி.ஆர்.சரஸ்வதி, போன்ற கோலிவுட் நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் கேரள சட்டசபை தேர்தலிலும் மலையாள நடிகர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தை போலவே கேரள சட்டப்பேரவைக்கும் வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கேரள வாக்காளர்களை பொறுத்த வரையில் அரசியலில் நடிகர், நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள். இருப்பினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் இன்னசென்ட் வெற்றி பெற்றார். இதனையடுத்து தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் நடிகர்கள் முகேஷ், ஜகதீஷ் மற்றும் 2 இயக்குநர்கள் போட்டியிட உள்ளனர். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த கே.பி.கணேஷ் குமார் கேரள காங்கிரஸ் (பி) என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கின்றது. இவரை எதிர்த்து காமெடி நடிகர் ஜகதீஷ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றார்.
மேலும் பாஜக சார்பில் நடிகர் பீமன் ரகு பத்தனம்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கொல்லம் தொகுதியில் பிரபல நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார். காளிதாசா கலாகேந்திரா நாடக கம்பெனியை தொடங்கிய மூத்த தலைவர் ஓ.மாதவனின் மகன்தான் முகேஷ். இவரும் களத்தில் இறங்கி உள்ளார்.
இயக்குநர்கள் ஏ.ராஜசேனன், அலி அக்பர் ஆகியோர் முறையே அருவிக்கரா, கொடுவலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தேசிய விருது பெற்ற நடிகர் சுரேஷ் கோபிக்கு சீட் வழங்க பாஜக விரும்பியது. ஆனால், இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அவர் கூறிவிட்டார். எனினும், பாஜக.வுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.