தடையை மீறி போராட்டம். நடிகை ரோஜா கைது
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையும், நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகரி நகராட்சி அலுவலகம் முன் அவர் தனது ஆதரவாளர்களுடன் தடையை மீறி போராட்டம் நடத்தியதாகவும், அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வரும் பாலாஜிநாத் யாதவ் என்பவருக்கும் நகராட்சி முன்னாள் தலைவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து கடந்த 14 ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் உருட்டுக்கட்டையால் அதிகாரி பாலாஜிநாத்தை தாக்கியதாகவும், அதன் காரணமாக பாலாஜிநாத் கொடுத்த புகாரை அடுத்து சுரேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷின் கைது நடவடிக்கையை கண்டித்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, தனது ஆதரவாளர்களுடன் நேற்று நகரி நகராட்சி அலுவலகம் முன் ஊர்வலம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த போராட்டத்திற்கு சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு அனுமதி மறுத்ததோடு நகரியில் 144 தடை உத்தரவும் பிறப்பித்தார். ஆயினும் ரோஜா தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக திருப்பதியில் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களான பாஸ்கர் ரெட்டி, ராமசந்திரா ரெட்டி, ஈஸ்வரி, திப்பாரெட்டி ஆகியோருடன் நகரிக்கு புறப்பட்டு வந்தார். அவர் செல்லும் வழியில் சத்திரவாடா என்ற இடத்தில் ஆந்திர மாநில போலீசார், தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற ரோஜாவை கைது செய்தனர். அதன் பின்னர் ரோஜாவை புத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். ரோஜா கைதை தொடர்ந்து ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.