அதிக கட்டணம் வசூல் ஆட்டோக்கள் பறிமுதல்

ஆட்டோ மீட்டர் திருத்த வழங்கப்பட்டிருக்கும் காலக்கெடுவை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. சென்னையில் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் ஆட்டோ மீட்டர்களில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்குள் எல்லா ஆட்டோக்களுக்கும் மீட்டர்கள் திருத்தியமைக்கப்படவில்லை. இதனால், மீதமுள்ள ஆட்டோக்களின் மீட்டர்களை திருத்தியமைக்க நவம்பர் 15 வரை அரசு அவகாசம் அளித்துள்ளது. எனினும் போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆட்டோக்களுக்கு மீட்டர் திருத்தியமைக்கவே காலக்கெடுவை நவம்பர் 15 வரை அரசு நீடித்துள்ளது. ஆனால், சில ஆட்டோ டிரைவர்கள் இதை காரணம் காட்டி, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருகின்றன. எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.இதுவரையில் 63,128 ஆட்டோக்களுக்கு புதிய ஆட்டோ கட்டண பட்டியல் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 34,380 ஆட்டோ மீட்டர்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. மேலும், அதிக கட்டணம் வசூலித்த 2,603 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோக்களின் மீட்டர் சீல் செய்ய சம்பந்தப்பட்ட ஆட்டோவின் ஆர்.சி. புத்தகம் அவசியமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான ஆட்டோக்களின் ஆர்.சி. புத்தகங்கள் நிதி நிறுவனங்களில் இருப்பதாக கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். ஆட்டோவின் உரிமையாளர்கள் குடும்ப அட்டையை கொடுத்து விட்டு ஆர்சி புத்தகங்களை வாங்கிச் செல்லலாம். பின்னர், ஆட்டோ மீட்டர் சீல் செய்த பின்னர், ஆர்சி புத்தகங்களை அவர்களிடம் ஒப்படைக்கலாம். இதற்கு அவர்கள் அனுமதி அளித்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply