அவசர கதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு. அனுதாப ஓட்டுக்களை பெற திட்டமா?

அவசர கதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு. அனுதாப ஓட்டுக்களை பெற திட்டமா?

3ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஒருசில நாட்கள் கூட அவகாசம் இன்றி நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு, இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் என அவசரகதியில் தேர்தல் அறிவிப்பு ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டுள்ளன.

ஆளுங்கட்சிக்கு எதிரான அலை கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது முதல்வர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பொதுமக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட்டுள்ளதாகவும், காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவுகள் வந்து கொண்டிருப்பதால், இந்த இரண்டையும் பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக அறுவடை செய்ய அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘” 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12 ஆயிரம் ஊராட்சிகளில் 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்குப் போட்டி நடக்கிறது. கடந்த சில நாட்களாகவே, ‘ தேர்தல் தேதி அறிவிக்கப்படும்’ என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கேற்ப, முதல்வரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் காத்திருந்தனர்.

இன்னமும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்த தேர்தலை சீக்கிரம் நடத்தி முடித்துவிட்டால், ஆளுங்கட்சி அனைத்து இடங்களையும் கைப்பற்றுவது எளிதாகும் என முதல்வருக்கு குறிப்பு அனுப்பப்பட்டது. மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை மாற்றுவதற்கு, மருத்துவனை ஓய்வு துணை நிற்கும் என கார்டன் வட்டாரம் உறுதியாக நம்புகிறது.

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் ஓட்டு வித்தியாசத்தில் பெரிய மாற்றம் இல்லை. இதே அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலும் அமைந்துவிட்டால், அனைத்து உள்ளாட்சிப் பதவிகளையும் கைப்பற்றுவது சிரமம் என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். அதிகாரிகளின் துணையோடு அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது கார்டன். அதையொட்டியே அவசர அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply