தேமுதிக அறிவிப்பால் ஜெயலலிதா குஷி. உற்சாகத்துடன் பிரச்சாரம் ஆரம்பம்
தேமுதிக தனித்து போட்டி என நேற்று விஜயகாந்த் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பால் பல கட்சிகள் கலக்கம் அடைந்திருந்தாலும், ஒரே ஒரு அணிக்கு மட்டும் குஷியாக உள்ளது. அதுதான் அதிமுக அணி.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என எண்ணியிருந்த அதிமுக தலைமைக்கு இந்த செய்தி டபுள் போனஸாக கருதப்படுகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் ஐந்தாக பிரிவதால் மிக எளிதில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என ஆளும் தரப்பினர் கருதுகின்றனர்.
இந்நிலையில் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்றுமுதல் சுறுசுறுப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா, தனது முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் தேதியையும், வேட்பாளர் பட்டியலையும் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி உள்பட முக்கிய தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (11-ம் தேதி) வெளியாகும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, சென்னையில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கக்கூடும் என்று தெரிகிறது.
மேலும் முதல்வர் முதல்கட்ட பிரச்சாரத்தை தனது சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில் இருந்து வரும் 17ஆம் தேதி தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரை அடுத்து சென்னை முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஜெயலலிதா அடுத்த மாதம் முதல் பிற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.