சசிகலா விளக்கத்துக்கு பன்னீர்செல்வம் அளித்த 16 பக்க பதில் மனு
அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்திருந்தனர். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு சசிகலா சார்பாக டிடிவி தினகரன் பதில் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம் சசிகலாவே பதில் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து சசிகலா தரப்பில் கடந்த 10ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் இந்த விளக்கத்துக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இருதரப்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றது செல்லுமா? என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.