அதிமுக மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 17 மற்றும் 19ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலைஇல் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 12 மாநகராட்சி வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி மேயராக இருக்கும் ஜெயா 41வது வார்டிலும், சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் 56வது வார்டிலும், தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் சாவிரித்ரி கோபல் 23வது வார்டிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் மட்டுமே மீண்டும் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உட்பட 6 மாநகராட்சி மேயர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் திருப்பூரில் 24வது வார்டில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார்.சில நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், துணை மேயர் சீனிவாசன் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.