மதுவை ஒழிப்பது குறித்து கோவையில் பாமக மாநாடு நடத்திய தினத்தில், கோவையில் மட்டுமே ரூ.1 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. முதலில் பாமகவினர் மது குடிப்பதை அன்புமணி நிறுத்த சொல்லட்டும், அதன்பின்னர் மதுக்கடைகளை மூடுவது குறித்து அவர் பேசலாம் என அ.தி.மு.க. எம்.பி சுந்தரம் பேசியுள்ளார்.
ராசிபுரத்தில் தமிழக அரசின் நான்காண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம்,
”தமிழகத்தில் எத்தனை பேர் முதல்வர் போட்டிக்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை. பா.ம.க., கோவையில் மாநாடு நடத்தி, அன்புமணிதான் முதல்வர் என்று கூறுகிறது. அந்த மாநாட்டில் மது ஒழிப்போம் என்றும், ‘டாஸ்மாக்’ கடையை மூடுவோம் என்றும் அன்புமணி ஆவேசமாக பேசினார். ஆனால், கோவையில் மாநாடு நடந்த தினத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, ஓய்வெடுக்கச் சொல்கின்றனர். நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்க சொல்வதில்லை. நான் எம்.பி. என்பதால், நாவை அடக்கி பேசுகிறேன். இனிமேல் யாராவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி பேசினால், நாக்கை வெட்டுவேன்” என்று பரபரப்பாக பேசினார்.
இதனை அடுத்து பேசிய தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி , ”எதிர்க்கட்சிகள் தான் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர். நாமும் அவர்களை போல், பேசக் கூடாது. எம்.பி., பேசியதில் எனக்கு வருத்தம் உள்ளது. அரசியல் நாகரீகம் அறிந்து நாம் பேச வேண்டும்” என்றார்.