சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவையை நேற்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் யாரையும் கூப்பிடாமல் தமிழக அரசு விழாவை நடத்தியுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு இன்று தமிழக அமைச்சர் தங்கமணி பதிலளித்துள்ளார்.
எந்தப் பொருள் பற்றியும் முழுவதுமாக எதையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேட்டிகள் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் என்று அதிமுக அமைச்சர் தங்கமணி சாடியுள்ளார்.
இது குறித்து தங்கமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நேற்று (29.6.2015), கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோமீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையை துவக்கி வைத்தார்கள். அந்த நிகழ்விலேயே, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சென்னை மெட்ரோ ரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களையும் துவக்கி வைத்தார்கள்.
மெட்ரோ ரயில் தொடக்க விழாவைப் பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள பேட்டி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. எந்தப் பொருள் பற்றியும் முழுவதுமாக எதையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேட்டிகள் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். அந்த வகையிலேயே மெட்ரோ இரயில் தொடக்க விழா பற்றிய அவரது பேட்டி அமைந்துள்ளது. அந்தப் பேட்டியில், “மத்திய அமைச்சர்களை விழாவுக்கு அழைத்திருக்கலாம். இந்த ஆட்சியில் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை” என்று கூறியுள்ளார்.
ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு ஜனநாயக வழிமுறைகளும் தெரியும்; அரசு நிர்வாகமும் தெரியும்; அரசு மரபுகளும் தெரியும்; அரசு நடைமுறைகளும் தெரியும். எந்த ஒரு அரசு விழாவிற்கும் முறைப்படி யாரை எப்படி அழைக்க வேண்டும் என்பதும் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றாகத் தெரியும். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இன்றைக்குப் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள் அல்ல. ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளவரே புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். முறைப்படி எதையும் செய்பவரும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். இவையெல்லாம், ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெரியாது என்றால், தனக்குத் தெரியாத விஷயங்களை அவர் பேசாது இருப்பதே நல்லது சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் இதர அமைப்புகள் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, சட்டப் பூர்வமான பாதுகாப்பு அனுமதியை இந்த மாதம் வழங்கினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதால், மெட்ரோ ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்கான அனுமதியை வழங்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையம், சென்னை மெட்ரோ ரயில் சேவையை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தபின் துவக்கி வைக்கலாம் எனவும், ஆனால், அவ்வாறு மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படுவது பற்றி, வாக்குப் பதிவு முடியும் வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது. எனவே, சென்னை மெட்ரோ ரயிலின் சேவை 29.6.2015 அன்று துவக்கப்பட முடிவெடுத்த போதும், அது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்குத் தொடர்புடைய துறையாகும். எனவே, சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவை துவக்க விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு பங்குகொள்ள வேண்டும் என்பதே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விருப்பமாகும். 29.6.2015 அன்று நடைபெறும் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை துவக்க விழாவில் கலந்து கொள்ளும்படி மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுக்கு 16.6.2015 அன்று முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. வெங்கையா நாயுடு 28.6.2015 அன்று வெளிநாடு செல்வதாகவும், 11.7.2015 அன்றுதான் இந்தியா திரும்புவதாகவும், எனவே, அதுவரை, இந்தத் திட்டத் துவக்க விழாவை ஒத்திப்போட வேண்டாம் என்றும், முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தபடி 29.6.2015 அன்றே துவக்க விழாவை நடத்திட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஜனநாயக முறை பற்றியும், மரபுகள் பற்றியும் எங்களுக்கு நன்கு தெரிந்துள்ளதால் தான், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுவை மெட்ரோ இரயில் துவக்க விழாவிற்கு நாங்கள் முறைப்படி அழைத்திருந்தோம். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாததால்தான், அந்தத் துறையின் இணைச் செயலாளர் இந்த விழாவில் கலந்து கொண்டார். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு பொருள் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததையே தனது கருத்தாக பேட்டி அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் என்பதை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நிரூபித்துள்ளார்.
“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
என்ற திருக்குறளை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.