சசிகலாவுக்காக போட்டி போட்டு ராஜினாமா செய்ய ஆர்வம் காட்டும் எம்.எல்.ஏக்கள்
ஜெயலலிதா வகித்து வந்த சக்தி வாய்ந்த பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எந்தவித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றிய சசிகலா, அடுத்தகட்டமாக முதல்வர் பதவியை கைப்பற்றவும் காய் நகர்த்தி வருகிறார். மேலும் முதல்வர் பதவியை கைப்பற்றினாலும் அந்த பதவியில் தொடர்ந்து நீட்டிக்க ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்
ஏற்கனவே ஜெயலலிதா மறைந்ததால் ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருந்தாலும் சசிகலா வெற்றி பெற வேறு பாதுகாப்பான தொகுதியை தேர்வு செய்ய அதிமுகவின் முன்னணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவுக்காக விட்டுக் கொடுக்கும் வகையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன், தி.நகர் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன், பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை, திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன் ஆகியோர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.