திருச்சி சிவாவை தாக்கிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா நீக்கம். ஜெயலலிதா அதிரடி
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்த அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும் இடையே நடந்த கைகலப்பில் சசிகலா, சிவாவின் கன்னத்தில் அறைந்ததாக செய்திகள் வெளியானது
இதுகுறித்து நேரில் சசிகலாவை வரவழைத்து ஜெயலலிதா கண்டித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று மாநிலங்கள்வையில் சசிகலா புஷ்பா பேசியபோது, “நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் நிர்பந்திக்கப்பட்டேன். ஆனால், எனது பதவியை நான் ராஜினாமா செய்யப்போவதில்லை” என்று பேசினார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஏற்கனவே திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.