ஜெயலலிதா ஜாமீன் மனு நிராகரிப்பு. பெங்களூரில் திடீர் சாலை மறியல்.

protetஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, பெங்களூருவில் அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தண்டனைக்கு தடை விதிக்கவும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் ஜெயலலிதா, தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுக்களை நேற்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் கர்நாடக உயர் நீதிமன்றம் வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், கருணாநிதி மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, நீதிமன்றம் அருகே அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தை  கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் போலீஸார் திணறினர்.

முதலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக நேற்று மாலை 4 மணிக்கு வெளியான செய்தியால் மகிழ்ச்சியடைந்த அதிமுகவினர் சில நிமிடங்களில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை அறிந்த பின்னர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

உயர் நீதிமன்றம் முன் கூடியிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். சில பெண்கள் தரையில் உருண்டு அழுது புலம்பினர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒசூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

Leave a Reply