தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவே அதிக எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 272தொகுதிகளை நெருங்கிவிடும் என்று தோன்றுகிறது.
இந்நிலையில் ஆட்சி அமைக்க மேலும் கூடுதல் தொகுதிகள் தேவைப்பட்டால், அதற்கு கண்டிப்பாக அதிமுக ஆதரவு கொடுக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதாவும், மோடியும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டாலும், அந்த தாக்குதல் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கே என்று பரவலாக கூறப்பட்டது. இருவருக்கும் இடையே இன்னும் இணக்கமான சூழ்நிலையே இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பாரதிய ஜனதாவை ஆட்டிப்படைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் அதிமுகவுக்கும் நல்ல தொடர்பு உண்டு. எனவே அதிமுக கட்சியை மத்திய அரசில் அங்கம் வகிக்க ஆர்.எஸ்.எஸ் பாரதிய ஜனதாவை வற்புறுத்தினால், அதை மோடியே நினைத்தாலும் எதிர்க்க முடியாது என்றே வடமாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வைகோ, விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் ஆகியோர்கள் அதிமுகவை பாரதிய ஜனதா ஆட்சியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்களுடைய எதிர்ப்பு எந்த அளவுக்கு மதிக்கப்படும் என்பதும் கேள்விக்குரியே?
எனவே ஜெயலலிதா பிரச்சாரத்தின்போது கூறியபடி, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நிலைதான் ஏற்படும் என்பதுதான் இப்போதைய கணிப்பு.