விஷ்ணுப்ரியாவுடன் காதலா? பிரபல வழக்கறிஞர் பரபரப்பு தகவல்
விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் தன்னை விஷ்ணுப்ரியாவின் காதலன் என ஒப்புக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதாக சேலத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் மாளவியா குற்றம் சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாளவியா இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்பவிட்டு விட்டு, வழக்கிற்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் வற்புறுத்தினர் என்றும், அதனால் விஷ்ணுப்ரியா நெருக்கடிக்கு ஆளானார் என்றும் தெரிவித்தார்.
தன்னைப் பணி செய்ய விடாமல் நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார், டி.ஐ.ஜி.குல்கர்னி, சேலம் மேற்கு மண்டல ஐ.ஜி.சங்கர், திருச்சி டி.எஸ்.பி மனோகரன் உள்ளிட்டோர் நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக விஷ்ணுப்ரியா தன்னிடம் கூறியதாகவும் மாளவியா கூறினார்.
மேலும் விஷ்ணுபிரியாவுடன் தான் காதலில் இருந்ததாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார், தன்னை நிர்பந்திப்பதாகவும் மாளவியா குற்றம் சாட்டினார்.
வழக்கறிஞர் மாளவியாவின் குற்றச்சாட்டினால் இந்த வழக்கு பெரும் பரபரப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.