நிம்மதியாக வாழப்போகும் வீட்டைக் கட்டி முடித்த பின்னர் இறுதியாக வந்து நிற்கும் வேலை வண்ணமடிப்பது. அவ்வளவு எளிதில் வீட்டுக்குத் தேவையான வண்ணங்களை நாம் தேர்ந்தெடுத்துவிடுவதில்லை. பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும் வண்ணங்களை அடிக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். நண்பர்கள் பரிந்துரைக்கும் இணையத்தை மேய்கிறோம், யாரிடமெல்லாம் கேட்க முடியுமோ அனைவரிடமும் கேட்கிறோம். ஏற்கனவே கட்டி முடித்திருக்கும் வீடுகளை எல்லாம் ஆவலுடன் கவனிக்கிறோம்.
அந்த வண்ணங்கள் நம் வீட்டுக்கு எப்படி இருக்கும் என மனசுக்குள் அநேக வண்ணங்களை மாற்றி மாற்றி வண்ணப்பூச்சு செய்து பார்க்கிறோம். கடைசியாக வீட்டுக்கு வண்ணமடிப்பதற்காக பெயிண்ட் வாங்கக் கடை கடையாக அலைந்து திரிகிறோம், ஒருவழியாக நமக்குத் தேவையான வண்ணத்தைக் கண்டடைகிறோம். அதையே வீட்டுக்குப் பூசி அழகு பார்க்கிறோம். அதில் மகிழ்ச்சியுடன் குடியேறிவிடுகிறோம். எல்லாம் சரிதான். பெயிண்ட்களில் கலந்துள்ள சில வேதிப் பொருட்கள் நோய்களை உருவாக்கிவிடுகின்றனவாம் அதை உணர்ந்து பெயிண்ட் தேடினீர்களா, வாங்கினீர்களா?
வழக்கமாக பெயிண்ட்களில் விஓசி எனச் சொல்லப்படும் நச்சுத் தன்மை கொண்ட எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் கலந்துள்ளன. வீட்டின் உள்ளே சுழன்று வரும் காற்றை மாசுபடுத்துவதிலும் இவற்றின் பங்கு அதிகம். ஏனெனில் இந்த விஓசிகள் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டவை என்பதால் காற்றில் எளிதில் கலந்துவிடும். இந்த விஓசியின் சில வகைகள் கண், காது, தொண்டை எரிச்சல், தலைவலி, ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் சில வகை விஓசியால் புற்றுநோய்கூட ஏற்படக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.
பெயிண்டுகளைப் பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு 50 கிராம் விஓசி வரை இருந்தால் அதனால் பெரிய பாதிப்பில்லை. அதற்கு மேல் விஓசி இருக்கும்போது அது வீட்டில் வசிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கவே செய்யும். மேலும் அடர் வண்ணங்களைவிட மென்மையான வண்ணங்களில் விஓசியின் அளவு குறைவாகவே இருக்கும், மணமும் நாசியை நெருடாமல் இருக்கும்.
பெயிண்டுகளில் மட்டுமல்ல வீட்டின் சில அறைக்கலன்கள் உருவாக்கத்திலும், வீட்டின் சுத்தப்படுத்தலுக்குப் பயன்படும் திரவத்திலும்கூட இந்த விஓசிகள் கலந்துள்ளன. ஆகவே ஆரோக்கியமான வாழ்வுக்கும் வீட்டுக்கும் விஓசியைக் கண்டறிந்து களைய வேண்டும். குறைந்தபட்சம் இதை மட்டுப்படுத்த வேண்டும்.
வீட்டில் பயன்படும் க்ளீனிங் பவுடரிலோ, திரவத்திலோ ஃபார்மால்டிஹைடு பென்சீன், அம்மோனியா, குளோரின், சோடியம் லாரல் சல்பேட் போன்ற வேதிப்பொருள்கள் கலந்திருக்கின்றனவா என்பதைக் கவனியுங்கள். இவை தீங்கு விளைவிக்கும் விஓசிகளைத் தர வல்லவை. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வீட்டைச் சுத்தப்படுத்தவும் உணவுப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தவும் நாம் பயன்படுத்தும் வேதிப்பொருள்கள் நமக்கு நோய்களை ஏற்படுத்திவிடாதவாறு நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
அறைகளில் நறுமணம் வீச வேண்டும் என்பதற்காக ஏர் ஃப்ரஷ்னர்களைப் பயன்படுத்துகிறோம். இதிலும் பென்சீன், ஃபார்மால்டிஹைடு ஆகிய வேதிப் பொருள்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இவற்றில் கவனம் வைக்காவிட்டால் நறுமணம் தவழ விரும்பி நச்சுக் காற்றைச் சுவாசிக்க நேரிடும்.
அதேபோல் பெண்கள் அதிகமாகப் பயன்படுத்தும் நெய்ல் பாலீஷ் ரிமூவர்களிலும் விஓசிகள் உமிழப்படும் வாய்ப்புகள் அதிகம். அறைக்கலன்களின் பாலீஷ் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களிலும் விஓசிகள் உள்ளன. இவை காற்றில் கலந்துவிடுவதால் நாம் சுவாசிப்பதன் மூலம் இவை நம் உடம்புக்குள் சென்றுவிடும்.
அதே போல் இத்தகைய வேதிப்பொருட்களை எக்காரணத்தைக் கொண்டு பெரிய அளவில் வீடுகளில் சேமித்துவைக்கக் கூடாது. புதிய வீடுகளின் பணியின் போது இத்தகைய பொருள்களை வாங்கி வைக்க நேர்ந்தால்கூட அவற்றைத் தனியே இருக்கும் அறைகளில் வைத்திருக்கலாமே தவிர நாம் புழங்கும் அறைகளில் வைத்திருப்பது ஆரோக்கியமானதல்ல. வீடுகளில் மிகச் சாதாரணமாக நுழைந்து நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் விஷயத்தில் கவனமாகத் தான் இருக்க வேண்டும்.