ஆப்கானிஸ்தான் நாட்டில் இஸ்லாமியர்களின் புனித நூலன குர் ஆனை நகலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண்ணை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர்களுக்கு ஆப்கானிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் ஃபர்குந்தா என்ற 27 வயது பெண் கடந்த மார்ச் 19ஆம் தேதி குர்ரான் நகலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த பெண் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க நீதிமன்றம் இருக்கும் நிலையில் பொதுமக்களே சட்டத்தை கையில் எடுக்ககூடாது என அந்த அமைப்புகள் வலியுறுத்தின.
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இளம்பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 19 போலீஸார் உட்பட 49 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, 4 பேர்களுக்கு மரண தண்டனையும், 8 பேர்களுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார். மீதம் உள்ளவர்களுக்கான தண்டனை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளது.