பல்கேரிய எல்லையில் ஆப்கானிஸ்தான் அகதி சுட்டுக்கொலை. ஐ.நா கண்டனம்

பல்கேரிய எல்லையில் ஆப்கானிஸ்தான் அகதி சுட்டுக்கொலை. ஐ.நா கண்டனம்
bulgaria
சமீபத்தில் சிரியா அகதியான அய்லான் என்ற சிறுவனின் பிணம் கரை ஒதுங்கிய பரிதாபமான புகைப்படத்திற்கு பின்னர் உலக நாடுகள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்ள சம்மத்திதுள்ள நிலையில், பல்கேரிய நாட்டில் நுழைய முயன்ற அகதி ஒருவரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் நடக்கும் போரால் வாழ்வு இழந்து போன சிரியா, ஆப்கானிஸ்தான்,  நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த சில மாதங்களாக அதிகளவில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 54 அகதிகளைக் கொண்ட ஒரு குழுவினர், துருக்கி வழியாக பல்கேரியா நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். நேற்றிரவு 10 மணிக்கு அவர்கள் பல்கேரியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள சிரிடெட்ஸ் நகரினுள் நுழைவதற்கு முயற்சித்தபோது எல்லையில் காவல் காத்துக்கொண்டிருந்த எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் அவர்களை நுழைய விடாமல் தடுத்ததாகவும், தொடர்ந்து அகதிகள் நுழைய முயன்றபோது எல்லை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பல்கேரிய நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம், பிற அகதிகள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்கேரியா நாட்டின் உள்துறை தலைமைச்செயலாளர் கொஸ்தொவ் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானை சேர்ந்த 20 முதல் 30 வயது உடைய 50-க்கும் மேற்பட்டவர்கள் நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார்கள். அவர்கள் சிரிடெட்ஸ் நகரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்தபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை எச்சரிக்கும் வகையில் போலீஸ் அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி சுட்டிருக்கிறார். தரையில் தவழ்ந்து சென்று அவர் சுட்டபோது, ஒரு அகதியின் மீது குண்டு பாய்ந்தது. அவர் அதில் பலியாகி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply