மதுவிலக்கு அமல்படுத்திய பீகார் மாநிலத்திற்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

மதுவிலக்கு அமல்படுத்திய பீகார் மாநிலத்திற்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை
alcohol
கோடிக்கணகில் வருமானம் தரும் மதுவை ஒரு அரசு ஒழிக்க முடிவு செய்வது மக்களின் மதுப்பழக்கம் குறைய வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் காரணம். அரசுக்கு வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை, மக்கள் மதுவில் இருந்து விடுபட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தில்தான் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அரசின் நோக்கம் சிறிதுகூட நிறைவேறவில்லை என்றும் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் காரணமாக பீகார் எல்லையிலும், நேபாள எல்லையிலும் கள்ளச்சாராயம் உள்பட மதுவகைகளின் விற்பனை அமோகமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் பெரும் பகுதி நேபாள எல்லையில் உள்ளதால் அந்த பகுதியில் மதுவுக்கு அடிமையான பீகார் குடிமக்கள் நேபாள எல்லைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். எனவே, அங்கு கள்ளச் சாராய விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. சின்னச்சின்ன சாராய வியாபாரிகள் நேபாள-பீகார் எல்லையில் கள்ளச்சாராயத்தை குடிசைத்தொழில் போல விற்பனை செய்து வருகின்றனர்.

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அங்கு குறைந்த அளவில்தான் கள்ளச் சாராய விற்பனை இருந்தது. ஆனால் தற்போது 2 முதல் 3 மடங்கு விற்பனை அதிகரித்ததுடன் விலை மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே மதுப்பழக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்ற பீகார் அரசின் நோக்கம் நிறைவேறாதது மட்டுமின்றி கள்ளச்சாராய வியாபாரம் பெருகவும் மதுவிலக்கு சட்டம் மறைமுகமாக உதவி செய்துள்ளது.

சட்டம் போட்டு மதுப்பழக்கத்தை பொதுமக்களிடம் இருந்து விடுபட வைப்பது முடியாத காரியம் என்றும் மது குறித்த விழிப்புணர்வை படிப்படையாக பொதுமக்களிடம் எடுத்து கூறுவது ஒன்றே இதற்கு வழி என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply