தமிழகத்திற்கு வருகின்ற 27 ஆம் தேதிக்கு பின் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் நடந்த ஒரு கூட்டத்தில் பரபரப்புடன் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்.27 ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மத்திய புள்ளியியல் ஆய்வறிக்கையில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் கவலை எல்லாம், 27 ஆம் தேதி வெளிவரப்போகும் தீர்ப்பு பற்றித்தான் உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ல் வரும் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், 27 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை பொறுத்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். ஒருவேளை அப்படி நடக்காமல் 2016ஆம் ஆண்டு தேர்தல் நடந்தாலும், அந்த தேர்தலிலும் தி.மு.க. தான் வெற்றிக் கனியை பறிக்கும்.
மேலும் இங்கு எழுச்சியுடன் தொண்டர்கள் திரண்டு இருப்பதை பார்க்கும் போது தி.மு.க.வை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.