மம்தாவை அடுத்து மாயாவதியும் ஆதரவு: காங்கிரசுக்கு கை கொடுக்குமா?
இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என ஒருசில கட்சிகள் ஆலோசனை தெரிவித்தன. இதற்கான முயற்சிகளையும் மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகரராவ் ஆகியோர் எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளருக்கு மம்தாபானர்ஜி ஆதரவு கொடுக்க சம்மதித்துள்ளார். மேலும் இந்த ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளதால் 3வது அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மம்தாவை அடுத்து மாயாவதியும் காங்கிரஸ் கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. உபி மாநிலங்களவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உபி மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் அஜய்குமார் லாலு கூறுகையில் ‘‘எங்கள் எம்எல்ஏக்கள் 7 பேரின் வாக்குகள் மாநிலங்களவை தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜுக்கு அளிப்பார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததற்கு பிரதிபலனாக மாயாவதி கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.