சுவாதி வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதம். வழக்கறிஞர் கண்டனம்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி காலை மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற 22 வயது வாலிபரை ஜூலை 1-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராம்குமாரின் புகைப்படத்தை போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிடும் முன்னரே கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளும் அவருடைய புகைப்படத்தை பல வடிவங்களில், பல கோணங்களில் வெளியிட்டுள்ளன. இதில் ராம்குமார் கழுத்தறுபட்டு கட்டோடு இருக்கும் புகைப்படங்களும் அடங்கும்
இந்நிலையில் குற்றவாளியை உறுதி செய்ய இன்று புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது. ராம்குமாரின் புகைப்படத்தை கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைவருமே ஊடகங்களில் பார்த்துள்ள நிலையில் இந்த அணிவகுப்பு சரிதானா? என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ”சுவாதி கொலை வழக்கில் அப்பாவியான ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த கொலை வழக்கில் சம்பந்தம் இல்லை என உறுதியாக கூற முடியும்.
இச்சம்பவத்தில் சட்டமீறல் நடந்துள்ளது. காவல்துறை, நீதித்துறையால் ஜனநாயகம் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இருட்டில் நடக்கும் திருட்டு சம்பவத்தில் கொள்ளையர்களின் உருவங்கள் தெரியாது. எனவே அதுபோன்ற வழக்குகளில் கைதானவர்களை சிறையில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளின் படங்களும் ஊடகங்களில் வெளிவராது. ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமார் தான் குற்றவாளி என போலீசார் முடிவு செய்து அவரது படத்தையும் வெளியிட்டார்கள்.
ராம்குமாரை பிடித்த போலீசாரையும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். பின்னர் ஏன் இந்த வழக்கில் தற்போது அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது? ராம்குமாரை அடையாளம் பார்ப்பவர்கள் போலீசாரின் நிர்பந்தத்தை மீறி அவர்களால் என்ன சொல்ல முடியும். காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான செயல்’. ‘இந்த அடையாள அணிவகுப்பு குற்றவியல் சட்டத்துக்கு புறம்பானது. ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது. மேலும், பெயர் தெரியாமல் இருந்தால் மட்டுமே அடையாள அணிவகுப்பு நடத்துவது சரியாகும்” என்று கூறியுள்ளார்.
After releasing photo parade was illegal said advocate