சித்ரா பெளர்ணமியில் அகத்தியர் தரிசனம்!
கோடை விடுமுறையில் அட்வெஞ்சர் டூர் செல்ல வேண்டும்; ஆனால், அந்த இடம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினால், பொதிகை மலையில் உள்ள அகத்தியர் கோயில் உங்களின் சரியான தேர்வாக இருக்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது 7,500 அடி உயரத்தில் இருக்கிறது இந்தக் கோயில். ‘சித்தர்களில் ஒருவரான அகத்தியர் முதலாம் தமிழ்ச் சங்கத்தில் சிவபெருமானுடன் தமிழ் மொழியை ஆராய்ந்தவர். சிவபெருமானுக்கு திருமணம் நடைபெற்றபோது, தென்புறம் உயர்ந்து வடபுறம் தாழ்ந்தது. இதையடுத்து, உலகை சமன் செய்யும் வகையில் அகத்தி யரை சிவபெருமான் பொதிகை மலைக்கு அனுப்பினார். இங்கு வந்த அகத்தியர், சிவபெரு மானை வேண்டி தனது கமண்டலத்தில் கொண்டு வந்த நீரைக் கவிழ்த்து தாமிரபரணி நதியை உருவாக்கினார்’ என்று புராணம் கூறுகிறது.
அகத்திய முனிவரின் அருளால் சிவபெருமா னின் திருவடிகளை அடைய முடியும் என்கிற நம்பிக்கையில் இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் யாத்திரை சென்று, அகத்தியரை தரிசித்து வந்தனர். இதற்கான நடைப்பயணம் சாகசம் மிகுந்தது. காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குடி, கன்னிகட்டி, பூம்பாறை, பாண்டியன்கோட்டை, துலக்க மொட்டை என முக்கிய இடங்களின் வழியாக 36 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். மிக முக்கியத்துவம் வாய்ந்ததான பூங்குளம் என்கிற இடத்தைக் கடக்க வேண்டும். இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கும் இடமும் இந்தப் பகுதிதான். அதிக விஷத் தன்மை கொண்டதாகக் கருதப்படும் ராஜ நாகங்களும் அதிகம் காணப்படும். வழுக்குப் பாறைகளைக் கடந்து மலையின் உச்சியில் இருக்கும் அகத்தியர் கோயிலை அடைய வேண்டும். ஆனால், இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் எந்த விலங்குகளாலும் பாதிக்கப்படுவதே இல்லை என்பது ஓர் அதிசய உண்மை!
சித்ரா பெளர்ணமியன்று மலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வனம் மற்றும் வன விலங்குகளுக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்து, பாபநாசம் வழியாக பொதிகை மலை யாத்திரை செல்ல தமிழக வனத்துறை 2008-ல் தடை விதித்துவிட்டது. ஆனால், கேரள வனத்துறையோ தங்களது பகுதியின் வழியாக இந்தக் கோயிலுக்குச் செல்வதை ‘எக்கோ டூரிச’மாக சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வழிநடத்துகிறது.
திருவனந்தபுரம் வழியாக காணிதடம் என்ற இடம் வரையிலும் வாகனத்தில் செல்லலாம். அங்கிருந்து நடந்து சென்றால், போனகாட் வனத்துறை செக்போஸ்ட் வரும். அங்கு அனுமதி பெற வேண்டும். ஒரு நபருக்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கிறார்கள். தனி நபராகவோ நாலைந்து பேராகவோ செல்ல முடியாது.குறைந்தது பத்து பேர் இருந்தால், அந்தக் குழுவுக்கு வழித்துணையாக அந்தப் பகுதியின் காணி இனத்தைச் சேர்ந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் இருவரை உடன் அனுப்புகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து 19 கி.மீ. தூரம் நடந்தால் அதிர்மலை முகாம் வரும்.
அங்கு தங்கிவிட்டு அடுத்தநாள் 10 கி.மீ தூரத்துக்கு மலையில் பயணம் செய்தால் அகத்தியர் கோயிலை அடையலாம். இதற்கான வழித்தடங்கள் திகில் நிறைந்ததாக இருக்கும். சில இடங்களில் பாறையில் அமர்ந்தும், தவழ்ந்தும், கயிறு கட்டியும் செல்ல வேண்டும். இந்த வருடமும் கேரள வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுச் செல்ல ஏராளமான பக்தர்கள் தயாராக உள்ளனர். நீங்களும் சென்று அகத்திய முனிவரின் ஆசியைப் பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!