அப்துல்கலாம் தீவில் இருந்து செலுத்தப்பட்ட அக்னி 1 ஏவுகணை வெற்றி.

அப்துல்கலாம் தீவில் இருந்து செலுத்தப்பட்ட அக்னி 1 ஏவுகணை வெற்றி.
agni
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறனுள்ள அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் (வீலர் தீவு) உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த சோதனை 100% வெற்றி என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன அக்னி 1 என்ற ஏவுகணை சோதனையின் போது 700 கி.மீ அப்பால் இருந்த இலக்கு ஒன்றை வெறும் 9 நிமிடங்களில் தாக்கி அழித்தது. 12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை, ஒரு டன் எடை வரையிலான ஆயுதங்களை எளிதில் சுமந்து சென்று இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எடையை இன்னும் கொஞ்சம் குறைத்தால் அதன் தாக்கும் தூரம் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பம் அக்னி 1 ஏவுகணையில் புகுத்தப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர், 27-ம் தேதி இதே ஏவுதளத்தில் இருந்து அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக அக்னி 1 என்ற ஏவுகணை சோதனை தற்போது நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply