உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்ந்து இந்தியாவின் சுற்றுலா ஸ்தலங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வரும் தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் “1212-ம் ஆண்டு ராஜாபரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜாமான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங்களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து மே மாதம் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, அடுத்த கட்ட விசாரணையை மே 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.