தண்ணீருக்கடியில் இயங்கும் இந்தியாவின் முதல் உணவு விடுதி. குஜராத்தில் ஆரம்பம்
தண்ணீருக்கு அடியில் இயங்கி வரும் நட்சத்திர ஓட்டல்கள் வெளிநாடுகளில் இருப்பதை நாம் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தண்ணீருக்கு அடியில் உணவு விடுதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கு அடியில் 20 அடி ஆழத்தில் இந்த உணவு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவு விடுத்திக்கு ‘தி ரியல் பொசெய்டோன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பாரத் பட் என்பவர் இந்த புதிய உணவு விடுதியைத் ஆரம்பித்துள்ளார். இந்த உணவு விடுதியில் ஒரே சமயத்தில் 32 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். இதில் தாய்லாந்து, மெக்சிகன் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு வகைகளோடு இந்தியாவின் அறுசுவை உணவு வகைகளும் கிடைக்கும். இந்த உணவு விடுதியில் சைவ உணவு வகைகள் மட்டும்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த உணவு விடுதியைச் சுற்றி 1.60 லட்சம் லிட்டர் தண்ணீர் உள்ளது. இதில் 4 ஆயிரம் வகையான மீன் உள்பட நீர்வாழ் உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன. கண்ணாடி மூலம் நீர் வாழ் உயிரினங்களை பார்த்து ரசித்தபடியே இங்கு வரும் வாடிக்கையாளர்கள் சூடான உணவு வகைகளை சுவைக்க முடியும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த உணவகத்திற்கு சாப்பிட வரும் கூட்டம் அதிகரித்து கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தண்ணீருக்கடியில் செயல்படும் இந்தியாவின் முதல் உணவு விடுதி என்ற பெருமையை இந்த உணவு விடுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.