தனக்கு தானே 100க்கு 100 மார்க் போட்டுக்கொண்ட பிளஸ் 2 மாணவன்.
குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரு மாணவன் தேர்வை எழுதி முடித்த பின்னர் சிகப்பு நிற பேனாவால் தான் எழுதிய தேர்வுத்தாளை தானே திருத்தி 100க்கு 100 மதிப்பெண் போட்டுக்கொண்டது தெரிய வந்துள்ளது. புவியியல் மற்றும் பொருளியல் தேர்வுகளில் அந்த மாணவன் இவ்வாறு செய்துள்ளதாகவும் இந்த தவறை விடைத்தாள் திருத்தும் ஆசிரியை ஒருவர் கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த மாணவன் குஜராத்தி (13), ஆங்கிலம் (12), சம்ஸ்கிருதம் (4), சமூகவியல் (20), உளவியல் (5), போன்ற பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததாகவும் கம்ப்யூட்டர் மென்பொருளில் தேர்வு முடிவுகளைப் பார்த்தபோது மதிப்பெண்களில் அதிக ஏற்றத்தாழ்வு தெரியவந்ததால் அந்த மாணவர் மாட்டிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
ஹர்ஷத் சர்வய்யா என்ற மாணவன் சந்தேகம் வராமல் இருக்க முதல் பக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் கூட்டலை எழுதவில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண்களைக் கூட்டி, நூற்றுக்கு நூறு என முதல்பக்கத்தில் எழுதி விட்டனர். தனித்தனியாக ஏழு ஆசிரியர்களும் ஒவ்வொரு விடையையும் மதிப்பீடு செய்து, கையொப்பமிட்டிருந்தால் அதனைக் கண்டறிந்திருக்க முடியும். இது தீவிரமான தவறு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு தேர்வுகளை எழுத முடியாமல் அவர் நீக்கப்படுவார் என்று கல்வித் துறை செயலாளர் (தேர்வு) ஜி.டி. படேல் கூறியுள்ளார்.