ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா 78 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு மாலை 6.10 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, செம்மலை எம்.பி., எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து சரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:
‘‘ஏற்காடு இடைத்தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது கோடானக்கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி எனக்கு கிடைத்தது அல்ல. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
ஏற்காடு தொகுதியில் எனக்கு பெருவாரியான வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கும் கோடானக்கோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றியின் மூலம் ஏற்காடு தொகுதியில் எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய கடமைப்பட்டு உள்ளேன்.’’ இவ்வாறு அவர் கூறினார்.