ஸ்ரீரங்கம் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ பதவியை இழந்த ஜெயலலிதா ஜெயித்த தொகுதி ஸ்ரீரங்கம் ஆகும். வரும் பிப்ரவரி 13ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள இந்த தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின்னர் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்துள்ளதா? அல்லது அனுதாபம் காரணமாக செல்வாக்கு அதிகரித்துள்ளதா? என்பதை காட்டும் இடைத்தேர்தல் இது என்பதால் இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று முதல் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 28 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஏற்கெனவே ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த என். ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் சில நாட்களில் தங்கள் கட்சியின் வேட்பளரை அறிவிக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்பு நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.