ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முறைகேடாக வாங்கியதாகவும், இதில் அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகவும் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்ளிட்ட 6 பேர்களுக்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் அவர்களை கட்டாயப்படுத்தி அவரது நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து கடந்த 2011ஆம் ஆண்டு சிவசங்கரன் சிபிஐயிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு சிபிஐ வழக்குத் தொடுத்தது. “ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன் மூலம் தனது அதிகாரத்தை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனர் டி. அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட் டிவி, சௌத் ஏசியா எஃப்எம், எஸ்ஏம்டிஎல் (மோரீஷியஸ்), ஏஎச் மல்டிசாஃப்ட் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், “வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் டிவி நிறுவனத்துடன் மேக்சிஸ் நிறுவனம் மேற்கொண்ட நிதிப் பரிவர்த்தனையில் அன்னியச் செலாவணி மோசடி நடந்துள்ளது’ என்று கூறியுள்ளது. மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியதில் உரிய விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், இதில் சிதம்பரத்தின் பங்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உள்ள பங்கு குறித்து விசாரித்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை கூறியுள்ளது.