தமிழகத்தில் ஏர்செல் முடக்கம்: வாடிக்கையாளர்கள் பெரும் அவதி

தமிழகத்தில் ஏர்செல் முடக்கம்: வாடிக்கையாளர்கள் பெரும் அவதி

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏர்செல் சேவை நேற்று முடங்கியது. இதனால் முக்கியமான நகரங்களில் பொதுமக்கள் ஏர்செல் விற்பனையகத்தை முற்றுகையிடும் சூழல் ஏற்பட்டது. செல்போன் கோபுரங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு ஏர்செல் நிறுவனம் சில நூறு கோடிகள் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த நிலுவை பாக்கி இருப்பதால் தமிழ்நாட்டில் இருக்கும் 8,000-க்கும் மேற்பட்ட டவர்களில் 6,000-க்கும் மேற்பட்ட டவர்கள் செயல்படவில்லை.

ஏர்செல் நிறுவனத்துக்கும் டவர் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏர்செல் செலுத்த வேண்டியதாக இருக்கும் தொகைக்கும், டவர் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடும் தொகைக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பே பல வட்டாரங்களில் ஏர்செல் சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என டவர் நிறுவனங்கள் வலியுறுத்துவதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியுள்ளது.

இதேபோல மற்ற நெட்வொர்க்குளை பயன்படுத்துவதற்காக கட்டணம் செலுத்தாததால் ஐடியா, வோடபோன் ஆகிய இணைப்புகளில் இருந்து ஏர்செல் மொபைலுக்கு அழைக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் மொபைல் எண்ணை மாற்றுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. மொபைல் எண்ணை மாற்ற விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இதிலேயும் நெட்வொர்க் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது.

இது குறித்து பேசிய ஏர்செல் நிறுவனத்தின் தமிழக பிரிவு தலைவர் சங்கரநாராயணன் கூறும்போது, நிறுவனத்தில் நிதி பிரச்சினை இருக்கிறது. இதனை சரி செய்யும் வேலைகளை மேற்கொண்டுவருகிறோம். விரைவில் தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தை அணுக இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணை மாற்றவிரும்பினால் அவர்கள் மாற்றிக்கொள்ளுவதற்கு வசதி செய்யப்படும். 22 வட்டாரங்களில் செயல்பட்டு வந்தாலும், சென்னை, தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட சில வட்டாரங்களில் நாங்கள் கணிசமான சந்தையை வைத்திருக்கிறோம். இந்த பகுதியில் தொடர்ந்து சேவை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம் என்று கூறினார்.

Leave a Reply